வழிபாடு

சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

Published On 2023-12-11 04:04 GMT   |   Update On 2023-12-11 04:04 GMT
  • கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
  • தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

சபரிமலை:

மண்டலபூஜை சீசனையொட்டி, கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ஆனால், 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு அதிகபட்சமாக 70 பக்தர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,200 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் செய்ய முடியும். தினசரி 17 மணிநேரம் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் சபரிமலையில் குவிந்து வரும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடிவதில்லை. இதனால் 18 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.

அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து 18 மணி நேரமாக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதன்படி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

இந்த நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் சபரிமலையில் முகாமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வசதியாக, தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனுக்குடன் மலையிறங்க வேண்டும்' என்று ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சீசனையொட்டி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News