ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு
- சுகப்பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல்.
- பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல்.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஆயிரம் லிங்கா கோணா கோவிலில் புதிய ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி பங்கேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வருமாறு:-
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான தர்மராஜா கோவில் அருகில் காலியாக உள்ள பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க 2 திருமண மண்டபங்களை கட்டுவது.
வெயிலிங்கால கோணா (ஆயிரம் லிங்கா கோணா) கோவிலில் புதிய கோபுரம் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்துவது.
சுகப் பிரம்மா ஆசிரமம் அருகில் உள்ள குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்துதல், பக்தர்களின் வசதிக்காக ஞானப்பிரசுனாம்பிகா சதன் முதல் பரத்வாஜ் சதன் வரை சாலை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்துதல்.
சொர்ணமுகி ஆற்றில் ராம-சேது பாலத்துக்கும் புதிய பாலத்துக்கும் இடையே உள்ள பகுதியில் கிழக்கு நோக்கிய சூரியநாராயணமூர்த்தி உருவச்சிலை, மேற்கு நோக்கிய கால பைரவர் சிலை ஏற்பாடு செய்தல்.
ஜல விநாயகர் கோவிலின் முன் தெற்கு நோக்கிய குரு தட்சிணாமூர்த்தி சிலையை அமைத்தல். பக்த கண்ணப்பர் மலையில் கட்டப்பட்டுள்ள சிவன்-பார்வதி சிலைகளை சுற்றி மலர் செடிகளை நடுதல்.
சாமியின் நெப்பல மண்டபத்தையொட்டி உள்ள நகராட்சி வணிக வளாகத்துக்கு நஷ்டஈடு வழங்குவதன் மூலம், அதைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் சன்னதியில் வரலட்சுமி விரதம், கோதா தேவி கல்யாணம், சீதா-ராம கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தென்மேற்கு பகுதியில் மண்டபம் அமைத்தல்.
பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரம் புதிதாக கட்டுவது.
பெத்தக்கன்னலியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில் என்பதை பக்தர்கள் அறியும் வகையில் பிரதான சாலையில் வளைவு அமைத்தல்.
கனகதுர்காதேவி நவராத்திரி கொண்டாட்டத்தின்போது, பிரசாதம் வழங்க மலையின் உச்சியில் சமையல் அறை அமைப்பது. அஞ்சூரு மண்டபம் முதல் துபான் சென்டர் வரை, சுற்று வட்டாரக் கிராம மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் படி சாமி, அம்பாளுக்கு ஆரத்தி எடுக்க நிரந்தரமாக நான்கு ஓய்வு மண்டபங்கள் கட்டுதல்.
பக்தர்களின் வசதிக்காக கனகாசலத்தின் இருபுறமும் பைபர் ஷீட்கள் பொருத்துதல். கோவிலுக்குள் வாகன மண்டபம் மற்றும் ஆச்சார்யா மண்டபம் நவீன மயமாக்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.