திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது
- நாளை கவச பிரதிஷ்டை நடக்கிறது.
- ஞாயிற்றுக்கிழமை கவச சமர்ப்பணம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூலை 2-ந்தேதி வரை 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்கக் கவசங்களை எடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்து தங்க முலாம் பூசி மீண்டும் உற்சவர்களுக்கு அணிவிப்பது ஜேஷ்டாபிஷேகம் ஆகும்.
அதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) கவச்சாதி வாசமும், நாளை (சனிக்கிழமை) கவச பிரதிஷ்டை, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கவச சமர்ப்பணம் நடக்கிறது. விழாவையொட்டி 3 நாட்களுக்கு காலை மகாசாந்தி ஹோமம், புண்யாஹவச்சனம், காலை 10 மணிக்கு உற்சவர்களான சாமி, தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மதியம் ஷடகலச ஸ்தாபனம், மாலை சாமி வீதி உலா நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் வரும் ஜேஷ்டா நட்சத்திரத்தின் தொடக்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.