கல்ப விருட்சம், சர்வ பூபால வாகனங்களில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி உலா
- கல்ப விருட்ச வாகன வீதிஉலா.
- பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. இன்று கருடசேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை 'கல்ப விருட்ச' வாகன வீதிஉலா நடந்தது.
கல்ப விருட்சம் என்பது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் தெய்வீக மரம். விஸ்வாகராமரால் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கல்ப விருட்ச வாகனத்தில் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி, தன்னை வணங்கும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவேன் என்பதை உணர்த்தவே கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.
வீதிஉலாவின் போது நான்கு மாட வீதிகளில் கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்த நாமங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தது விண்ணில் எதிரொலித்தது.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள், யானைகள், காளைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. ஆண், பெண் பக்தர்கள் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பத்மாவதி தாயார், நரசிம்மர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட வேடமிட்டு ஆடி, பாடி சென்றனர். பல்வேறு கலைஞர்கள் நடனம், கோலாட்டம், நாட்டுப்புற நடனம் ஆடினர். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
வாகன வீதிஉலாவில் திருமலை மடாதிபதிகள், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ, முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை 'சர்வ பூபால' வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா நடக்கிறது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணியளவில் 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) தொடங்கி நடக்கிறது.