வழிபாடு

காஞ்சீபுரம் சித்ரகுப்தர் கோவில் கும்பாபிஷேகம்: இன்று மாலை யாக சாலை பூஜை

Published On 2023-05-02 08:58 GMT   |   Update On 2023-05-02 08:58 GMT
  • கும்பாபிஷேகம் 4-ந்தேதி நடக்கிறது.
  • மே 5-ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள கேது தலமாக விளங்கும் சித்ர குப்தர் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடைபெற உள்ளது.

இதையொட்டி கோவிலில் விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் நேற்று தொடங்கியது.

இந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கு என்று தனியாக சந்நிதி உள்ள ஆலயம் காஞ்சீபுரத்தில் உள்ள கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில். இந்த கோவிலில் வருகிற வியாழக்கிழமை (4-ந்தேதி) காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முதல் நிகழ்ச்சியாக அனுக்கை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோ மம், லட்சுமி ஹோமம், கோ பூஜை ஆகியவை காலையிலும் பிரவேச பலி, வாஸ்து சாந்தி ஆகியவை மாலையிலும் நடைபெற்றன.

இன்று (செவ்வாய்க் கிழமை) காலை மூர்த்தி ஹோமும், யாக சாலை அலங்காரமும், மாலையில் யாக சாலை பூஜையும் முதல் கால தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக 4-ந்தேதி (வியாழக்கிழமை) காலை மகா பூர்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு காலை 9.30 மணிக்கு ராஜ கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையடுத்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை கர்ணகி அம்பாளுக்கும், சிதரகுப்த சவாமிக்கும் திருக்கல்யாணமும், பின்னர் சுவாமியும், அம்மனும் காஞ்சீபுரம் ராஜ வீதிகளில் வீதியுலா வருகின்றனர்.

மறுநாள் (மே 5-ந்தேதி) சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை காஞ்சீபுரம் சரக இணை ஆணையர் வான்மதி, கோவில் செயல் அலுவலர் அமுதா, அறங்காவலர் குழுவின் தலைவர் ரகுராமன், உறுப்பினர்கள் சந்தானம், ராஜாமணி மற்றும் கோவில் அர்ச்சர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News