காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
- வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று ஆகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 3-வது நாளான இன்று கருடசேவை உற்வம் விமரிசையாக நடை பெற்றது. இதையொட்டி இன்று காலை வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஊதா நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண பாடலுடன் வரதராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்ததால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நான்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. கருடசேவை விழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.