கற்பக விருட்சம், சர்வ பூபால வாகனங்களில் கோதண்டராமர் வீதி உலா
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா.
திருமலை:
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று 8 மணியில் இருந்து 9 மணிவரை தெய்வீக மரமான கற்பக விருட்ச மர வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கற்பக மரத்தின் கீழே அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்தால் நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல் பக்தர்கள் கேட்கும் வரங்களை வாரி வழங்கவே உற்சவர் கோதண்டராமர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதிகளில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பிறகு உற்சவர்களான சீதாதேவி, லட்சுமணர், கோதண்டராமருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, கோவில் துணை அதிகாரி நாகரத்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.