வழிபாடு

மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சி.

திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது

Published On 2022-12-05 04:59 GMT   |   Update On 2022-12-05 04:59 GMT
  • நாளை காலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
  • 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவமும், தொடர்ந்து 25-ந் தேதி பிடாரி அம்மன் உற்சவமும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நவம்பர் 27-ந்தேதி கோவில் சாமி சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப விழா தொடங்கியது.

இதனை தொடர்ந்து 10 நாள் காலை இரவு என இரு வேளைகளிலும் பஞ்சபூர்த்திகள் மாடவீதி உலா வருகின்றனர். விழாவில் 7-ம் நாளான கடந்த 3-ந்தேதி பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற்றது.

கார்த்திகை தீப விழாவின் உச்ச நிகழ்வாக நாளை செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கோவில் சாமி சன்னதி அருகில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள 5 ½ அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரை தயார் செய்யப்பட்டு இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலை மீது எடுத்து சென்றனர்.

இதற்காக 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதனையும் மலைக்கு கொண்டு சென்றனர்.

கார்த்திகை தீப திருவிழாவில் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு உட்பட 4 மாநில கவர்னர்கள் மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் வருகை தர உள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News