வழிபாடு

கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது

Published On 2023-02-17 07:22 GMT   |   Update On 2023-02-17 07:22 GMT
  • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
  • இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படியுடன் நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 21 வகையான பொருள்களால் மகா அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் கோவில் மண்டபத்தில் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அலங்காரம் மற்றும் ரோஜா, மல்லிகை, சம்பங்கி உள்பட பல்வேறு மலர்களால் சிவன், முருகன், ஆண்டாள், வாராகி அம்மன் கோலங்கள் போடப்பட்டது. இதேபோல் பூத்தமலர் பூ அலங்காரத்தில், கரகங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மாசித்திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News