கோட்டை மாரியம்மன் கோவில் 12-ம் ஆண்டு விழா: அம்மனுக்கு தங்க கவச அலங்காரம்
- அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா மற்றும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கும்பாபிஷேக 12-ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு தம்பதி சங்கல்பம், புண்யாக பஞ்ச கவ்ய பூஜை, ஆத்மசுத்தி, வேதிகார்ச்சனை, வேதபாராயணத்துடன் கணபதி பூஜை நடந்தது. 8 மணிக்கு யாக பூஜை, திரவிய யாகம், மகாபூர்ணாகுதியுடன் கோட்டை மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
இந்த சிறப்பு வழிபாட்டில் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். ஆண்டு விழாவையொட்டி கோவில் உட்பிரகாரம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர், திருப்பூர் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் சமூக நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.