குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
- இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 26-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்து வருகிறது. இரவில் துர்க்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி, பாலசுப்பிரமணியர் ஆகிய திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலாவும் நடைபெற்று வருகிறது.
6-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தசரா குழுவினர் நேற்று முதல் கோவிலில் காப்பு கட்டி குழுக்களாக ஊர் ஊராக சென்று நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். நேற்று தாண்டவன்காட்டில் காளி பக்தர்கள் தசரா குழுக்களாக சென்றனர்.