வழிபாடு

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

Published On 2024-10-03 02:52 GMT   |   Update On 2024-10-03 02:52 GMT
  • நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
  • பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

விழா நாள்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார்.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணியும் பக்தர்கள், தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அக்.13ம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் வைபவம் நடைபெறும்.

Tags:    

Similar News