வழிபாடு

கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி

Published On 2023-07-23 02:09 GMT   |   Update On 2023-07-23 02:09 GMT
  • நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடி வழிபட்டனர்.

கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில், நாகேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், சோமேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி 6 கோவில்களில் இருந்து சாமிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மகாமகக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் மங்களாம்பிகை அம்பாள் தவிர, நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகி, காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து காசிவிசாலாட்சி, சோமேஸ்வரர் கோவில் சோமசுந்தரி, அபிமுகேஸ்வரர் கோவில் அமிர்தவல்லி மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் புறப்பட்டு மகாமக குளத்துக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் அஸ்திர தேவர்களுக்கு பால், மஞ்சள், தேன், திரவியப்பொடி, சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடி வழிபட்டனர்.

அம்மாப்பேட்டை மார்வாடிதெருவில் உள்ள வீரமகாகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபாடு செய்தனர்

சுவாமிமலை அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி காலை சிறப்பு அபிஷேகமும், மாலை சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு அம்பாளுக்கு விசேஷ அலங்காரமும், வீதி உலா காட்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி தென்பாதி தெற்கு தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி காவடி, பால்குடம், கஞ்சி வார்த்தல் ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அதனை தொடர்ந்து மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்தனர். பின்னர் காமாட்சி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை துவரங்குறிச்சி தென்பாதி காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News