வழிபாடு

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2023-05-04 06:39 GMT   |   Update On 2023-05-04 06:39 GMT
  • இந்த கோவில் தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற சிறப்புக்குரியதாகும்.
  • இந்த தேர், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடை கொண்டது.

108 வைணவ திவ்யதேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுவது கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆகும்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 29-ந்தேதி கருட சேவை வைபவம் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேரை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ, கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 வீதிகள் வழியாக வந்து நிலையடிக்கு சென்றது. பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

இந்த கோவில் தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற சிறப்புக்குரியதாகும். இந்த தேர், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடை கொண்டது.

இந்த தேரின் 4 சக்கரங்கள் 9 அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள 2 குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும், தேரோட்ட த்திற்காக 12 இன்ச் உயரம், 10 இன்ச் அகலத்தில், ஒன்றரை அடி நீளத்தில் தலா 25 முதல் 30 கிலோ எடையிலான 250 முட்டுக்கட்டைகள் வாகமரத்தில் தயார் செய்ய ப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News