வழிபாடு

திருமண வரம் அருளும் லட்சுமி நாராயணர்

Published On 2024-06-28 02:30 GMT   |   Update On 2024-06-28 02:30 GMT
  • 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.
  • லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார்.

சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், பள்ளஈகை. இந்த கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயமானது, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.

ஒரு கட்டத்தில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி கிடந்த இந்த ஆலயத்தை, அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைப்போடு, புனரமைத்ததோடு, ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் கடந்த 2013-ம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பச்சை பசேலென்று இயற்கை படர்ந்த பள்ளஈகை கிராமத்தில் இத்தலம் அழகுற அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளியே விளக்குத் தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. ஒரு நிலை ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், நான்கு கால் மண்டபம் காணப்படுகிறது.

இந்த ஆலயமானது, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ஆலயத்தின் உள்பகுதியில் இடது புறத்தில் ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது.

மேலும் ஆலயத்திற்குள் ஆதிசேஷன் (நாகர்) திருமேனியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், ஸ்ரீதேசிகன் ஆகியோர் சிலை ரூபத்தில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

இவ்வாலய மூலவரான லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார். அவர் தனது இடது பக்க மடி மீது மகாலட்சுமி தாயாரை அமர வைத்து, தனது இடது கரத்தால் தாயாரை அணைத்தவாறு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக ஸ்ரீதேவி- பூதேவி சமேத லட்சுமி நாராயணரின் உற்சவத் திருமேனியும் உள்ளது.

அருகிலேயே சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேசிகர் ஆகியோருக்கும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் வீற்றிருக்கும் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு இல்லை. மாறாக ஆலயத்தின் தீபத் தூணில் சிற்பமாக அவர் காணப்படுகிறார்.

தாயாருடன் அருளும் இத்தல பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை பிரார்த்திப்பதால், கணவன் - மனைவி ஒன்றுமை ஓங்கும் என்பதும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் இத்தலத்திற்கே உரிய பெரும் சிறப்பாகும். இதுதவிர குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகவும், இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

ஆண்டுதோறும் இத்தலத்தில் பலவிதமான விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு, ஆனித் திருவோணம் (கும்பாபிஷேக தினம்), ஆவணி மாதத்தில் திருபவித்ரோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல் (சங்கராந்தி), ராமநவமி, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்வாலயத்தில் பாஞ்சராத்ர ஆகமப்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஒரு கால நித்திய பூஜை தவறாமல் நடைபெறுகிறது.

அமைவிடம்

திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கொத்திமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பள்ளஈகை கிராமம் அமைந்துள்ளது.

Tags:    

Similar News