மதுரை புதூர் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி
- இன்று ஆலய வளாகத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது.
- திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி திருச்சி சலேசிய மாநில தலைவர் அகிலன் தலைமையில் கொடி ஏற்றம் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலிகள் நடைபெற்றது. மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி கலந்து கொண்டு திருப்பலி நடத்தினார்.
நேற்று முக்கிய நிகழ்ச்சியாக லூர்து அன்னை தேர் பவனி நடந்தது. முன்னதாக சேலம் மறை மாவட்டம் முன்னாள் ஆயர் சிங்கராயன் அர்ச்சித்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இரவு 8 மணிக்கு அன்னையின் தேரானது வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. சந்தன மாதா கோவில் தெரு, மாதா கோவில் தெரு, பாரதியார் ரோடு, சிங்காரவேலர் தெரு, அழகர் கோவில் ரோடு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புனித லூர்து அன்னை திருத்தல அருள்பணி உதவி பங்கு தந்தையர்கள் பாக்கியராஜ், பெலிக்ஸ், யூஜின் டேவிட், அருட்தந்தைகள், சி.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் புதூர் சின்னத்துரை, சலேசியர்கள், மாநகராட்சி உறுப்பினர் அந்தோணியம்மாள் சவுரிராயர் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று புனித லூர்து அன்னை ஆலய வளாகத்தில் பொங்கல் விழா நடைபெறுகிறது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். பின்னர் ஜெபமாலை நற்கருணை ஆராதனையுடன் கொடி இறக்கம் பங்குத்தந்தை தாஸ் கென்னடி தலைமையில் நடக்கிறது. புதூர் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.