வழிபாடு

புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள்- (நாள்-24)

Published On 2024-04-05 03:39 GMT   |   Update On 2024-04-05 03:39 GMT
  • தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே.
  • நபி அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.

`தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே'

'தர்மத்தில் சிறந்தது எது?" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர் மிதி)

புனித ரமலான் மாதம், மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் தமது கொடைத்தன்மையை விரிவுப்படுத்தியதுடன் அதிகப்படுத்தியும் செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக வாரி வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஒதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றைவிட (வேக மாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்.(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்:புகாரி)

நபி (ஸல்) அவர்களின் சொல்படியும், அவர்களின் செயல்படியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தான தர்மம் செய்தது நமது கவனத்தை ஈர்க்கிறது.

ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு 1180 வெள்ளிக்காசுகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அன்று அன்னையார் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையில் தமக்கு அன்பளிப்பாகக் கிடைத்த அனைத்து வெள்ளிக் காசுகளையும் மக்களிடையே பங்கு வைத்து வாரி வழங்கி விட்டார்கள்.

நோன்பு திறக்கும் இப்தார் நேரம் வந்ததும், தமது பணிப்பெண்ணிடம் நோன்பு திறக்க உணவு கேட்டார்கள். பணிப்பெண் ரொட்டியையும், ஆலிவ் எண்ணெய்யையும் கொண்டு வந்து, 'தாங்கள் இன்று பங்கீடு செய்த வெள்ளிக் காசுகளிலிருந்து நோன்பு திறக்க இப்தார் உணவுக்காக இறைச்சி வாங்கி வரக்கூட ஒரு காசையும் மிச்சம் வைக்காமல் ஏன் அனைத்தையும் வாரி வழங்கினீர்கள்?' என்று கேட்டாள். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி), 'இதை முன்பேநீ எனக்கு ஞாபகப்படுத்தி இருந்தால், நான் அவ்வாறே செய்திருப்பேனே!' என்று கூறினார்கள்.

'எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு, நோன்பாளிக்கு வழங்கப்படும் நன்மை போன்று கிடைக்கும். இதனால் நோன்பாளியின் நன்மையில் இருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஜைத் பின் காலித் ஜூஹ்னீ (ரலி), நூல்: திர்மிதி)

நபி (ஸல்) அவர்களைப் போன்று நபித் தோழர்களும் ரமலானில் அதிகமாக கொடையளித்து வந்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்னதானம் வழங்கு வதையும் சிறந்த செயலாக கருதினார்கள்.

Tags:    

Similar News