மகா சிவராத்திரி பிரம்மோற்சவம்: சூரியபிரபை, பூத வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் வீதி உலா
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா.
- நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகன வீதிஉலாவில் கோவில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா, இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வருகின்றனர்.