காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்
- சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர்.
- நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது.
இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க பெரிய தேரில் கங்காபவானி சமேத சோமசுந்தரமூர்த்தியும் சிறிய தேரில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளினர்.
தேரோட்டத்தை ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன்ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில்காலை 11.30 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேர்கள் பவனி வந்தன. தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா, ஜெய் ஜெய் காளி ஜெய் பத்ர காளி எனப் பக்தி கோஷம் எழுப்பினர்.
தேர்களுக்கு முன்னால் கேரள செண்டைமேளம், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. சாமி வேடமிட்ட பக்தர்கள் நடனம் ஆடினர். பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டமும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
தேரோட்டத்தின்போது கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் உப்பு, மிளகினை தேர்கள் மீது வீசி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நிறைவாக இரவு நிகழ்ச்சியாக 8 மணியளவில் நாதர் புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது. தெப்பத்தேரில் எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.