வழிபாடு

யானை மீது சந்தனகுட பவனி நடந்த போது எடுத்த படம்.

மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா: இன்று இரவு வலிய படுக்கை பூஜை நடக்கிறது

Published On 2023-03-10 05:42 GMT   |   Update On 2023-03-10 05:42 GMT
  • பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து வலிய படுக்கை பூஜையில் கலந்து கொள்வார்கள்.
  • வலியப்படுக்கையில் படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை போன்றவை நடந்தது.

மாலை 4.15 மணிக்கு மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையில் இருந்து யானை மீது சந்தன குடம் பவனி புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. 6 மணிக்கு தங்கத்தேர் பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது.

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணி வரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம், 8 மணிக்கு பக்தி பஜனை, 10 மணிக்கு பெரியபுராணம் தொடர் விளக்கவுரை ஆகியவை நடந்தது. 11 மணிக்கு பொருளாளர் சசீதரன் தலைமையில் சமய மாநாடு, பிற்பகல் 2 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 4 மணிக்கு இசைச்சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 6 மணி முதல் 7.30 வரை பரத நாட்டியம், 7.30 மணி வரை சமய மாநாடு ஆகியவை நடந்தது.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான மகா பூஜை என்னும் வலிய படுக்கை பூஜை நடக்கிறது. வலியபடுக்கை பூஜை என்பது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு, கனி வகைகள், இனிப்பு போன்றவற்றை அம்மன் முன்பு பெரும் படையலாக படைத்து வழிபடுவதாகும்.

இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6-வது நாளும், மீன பரணிக்கொடை அன்றும், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் என ஆண்டுக்கு 3 முறை மட்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து இந்த வலிய படுக்கை பூஜையில் கலந்து கொள்வார்கள். வலியப்படுக்கையில் படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

Tags:    

Similar News