மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-17)
- உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா!
- நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக!
திருப்பாவை
பாடல்
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
உடுக்க உடையும், குடிப்பதற்கு நீரும், உண்பதற்கு உணவும் கேட்டவர்களுக்கு, அவர்களின் மனம் நிறைவடையும்படி அவற்றை அளிக்கும் எம்பெருமானே! உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா! நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக! பெண்களுக்கெல்லாம் கொழுக்கொம்பாக உதவி நிற்கின்ற இளகிய மனம் கொண்ட யசோதையே! எங்கள் தலைவியே! எழுந்த ருள்வாயாக! வாமன அவதாரத்தின் போது வானத்தைப் பிளந்து உயர்ந்து நின்று, உன் திருவடிகளால் உலகத்தை அளந்த தேவதேவனே! கண்ணா! நீ தூக்கம் நீங்கி கண்விழிக்க வேண்டும். வீரக்கழல் அணிந்த செல்வனே பலராமா! நீயும் உன் தம்பி கண்ணனும் துயில் எழுந்து வந்து எங்களைக் காத்தருள வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசே அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
தேன் சிந்தும் மலர்களை அணிந்துள்ள பெண்ணே! சிவந்த கண்களுடைய திருமால், நான்கு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களை கொண்ட பிரம்மா, தேவலோகத்தில் வாழும் தேவர்கள், இவர்களிடம் இல்லாத ஓர் இன்பநிலை நமக்குக் கிடைத்துள்ளது. தலைவனாகிய சிவபெருமான் நமது வேண்டுதலை நிறைவேற்றுபவர். அவர் சிவந்த தாமரை மலர் போன்ற பாதங்களைக் கொண்டவர். இவர் நம் வேண்டுதலுக்கு இணங்க நமது வீடுகள்தோறும் எழுந்தருள் கிறார். அழகான கண்களைக் கொண்ட சிவனடியார்களின் நோய் தீர்க்கும் அரு மருந் தாக இருப்பவன், அமுதம் போன்றவன் என்றும் சிறப்புமிக்க அந்த இறைவனைப் போற்றிப் புகழ்வோம். அழகிய மலர்கள் நிறைந்த குளத்தில் மூழ்கி நீராடுவோம். நம் குற்றங்கள் நீங்க ஆடி மகிழ்ந்து பாடுவோம்.