வழிபாடு

மாசி திருவிழா: சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா

Published On 2024-02-21 03:09 GMT   |   Update On 2024-02-21 03:09 GMT
  • மாசித் திருவிழா 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், உருகு சட்ட சேவை நடந்தது.

பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார்.

தொடர்ந்து சுவாமி- அம்பாள்களுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் 8-ம் நாளான இன்று (புதன்கிழமை) பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

10-ம் திருநாள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாள் (சனிக்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது.

Tags:    

Similar News