தென்காசி, காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக தேரோட்டம்
- மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
- கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.
தென்காசி:
தென்காசியில் பழமையான காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான மாசி மகப்பெருவிழா கடந்த 15-ந்தேதி சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப் பட்ட ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்க ப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது.
விழாவின் 9-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் காசி விஸ்வநாதர் மற்றும் உலக அம்மன் பக்தர்களுக்கு கட்சி அளித்தனர். தேரை திரளான பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பொதுமக்கள் பலர் அன்னதானம் மற்றும் மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். மாசி மக பெருந்திரு விழாவில் வருகிற 28-ந்தேதி பச்சை சாத்தியுடன் கூடிய தாண்டவ தீபாராதனை நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.