தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றம்
- மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா கொண்டாடப்படும்.
- கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தென்காசி:
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான மாசி மக பெருவிழா இன்று காலை சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான வருகிற 21-ந்தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 28-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி ரத வீதி உலாவும் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 23-ந்தேதி அன்று சுவாமி-அம்பாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.