கமுதியில் மாசிக்களரி திருவிழா: ஆடுகள் பலியிட்டு குலதெய்வ வழிபாடு
- மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம்.
- பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன.
பசும்பொன்:
மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம். அதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் 19 கிராமங்களுக்கு சொந்தமான பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து அய்யனார் கோவில்கள் களை கட்டின.
இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன. இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை கிடா வெட்டு நடைபெற்றது.
ஒரே வெட்டில் தலை வேறு, உடல் வேறாக ஆடுகள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரட்டை கிடா வெட்டுவது வழக்கம். பலியிடப்பட்ட ஆடுகள் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின் அவரவர் சமைக்க கொண்டு சென்றனர்.
இந்த திருவிழாவில், கமுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.