வழிபாடு

மேல்மலையனூர் தீமிதி திருவிழா

Published On 2023-08-14 09:27 GMT   |   Update On 2023-08-14 09:27 GMT
  • விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது.
  • மனத்தூய்மையும், உடல் தூய்மையும் விரத நாட்களில் மிக அவசியமாகும்.

மேல்மலையனூர் கோவிலில் தேர்த்திருவிழாவின் போது தீமிதித் திருவிழாவும் நடத்தப்படும். இவ்விழாவில் கலந்து கொண்டு தீ மிதிக்கும் பக்தர்கள் கடுமையான சுத்தத்துடன் ஒருவார காலம் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

இந்த விரதமானது சபரிமலை அய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்குவது போன்று மாலை அணிந்து கொள்வதில் இருந்து தொடங்குகின்றது.

தீமிதி விழாவில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி துளசி மணிமாலை, ருத்திராட்ச மாலை சந்தனமாலை, பச்சைமணி மாலை இவைகளில் தங்களுக்கு பிடித்தமான மாலையை வாங்கி அதனை பாலில் நனைத்து பின் மஞ்சள் நீரில் நனைத்து தன் பெற்றோர் அல்லது கோயில் குருக்கள் அல்லது அங்காளம்மன் அருள்வாக்கு பெற்றவர்களிடம் கொடுத்து மணிமாலையை அணிந்து கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இருவேளையும் குளித்த பின்பு 'ஓம் சக்தி அங்காளம்மா' என உச்சரித்து வணங்க வேண்டும். இந்த விரதத்தின் போது மஞ்சள் அல்லது காவி நிற உடைகளை அணிவது அவசியமாகும்.

இந்த தீமிதி விழாவில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பெருமளவில் பங்கு கொள்கின்றனர். ஆண்களுக்கு கூறப்பட்ட அனைத்து விரத முறைகளையும் பெண்களும் கடைப்பிடிப்பர். இந்த விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது.

மாலை அணிந்த பின் ஆணாயினும், பெண்ணாயினும், சிறுவனாயினும், சிறுமியாயினும் அவர் 'அங்காளம்மா' என்றே அழைக்கப்படுவர்.மனத்தூய்மையும், உடல் தூய்மையும் இந்த விரத நாட்களில் மிக அவசியமாகும்.

பெண்கள் இந்த விரதம் இருந்து வரும்போது மாதவிலக்கு பிரச்சினை ஏற்பட்டால் அன்று மாலையை கழற்றிவிட்டு 3 நாட்கள் கழித்து தலைக்கு 3 எண்ணை சேர்த்து குளிப்பதுடன் மஞ்சள் நீரிலும் நீராடி அதன்பின் மாலையை பாலிலும் அதன்பின் மஞ்சள் நீரிலும் கழுவி சாம்பிராணி புகை காட்டி வீட்டிலேயே சுவாமி படத்தின் முன் மறுபடியும் மாலையை அணிந்து கொள்ள வேண்டும்.

இந்த பக்தர்கள் தீ மிதித் திருவிழாவன்று தீக்குண்டத்தில் இறங்கி வெளிவருவார்கள். ஆடி மாதம் முழுக்க இதே மாதிரி பய பக்தியுடன் மேல்மலையனூரில் அங்காளம்மனை பக்தர்கள் வேண்டிக் கொள்வதை காண முடிகிறது.

Tags:    

Similar News