வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு லிங்கபைரவிக்கு முளைப்பாரி அர்ப்பணம்: நூற்றுக்கணக்கான பெண்கள் பாத யாத்திரை

Published On 2024-01-25 10:03 GMT   |   Update On 2024-01-25 10:03 GMT
  • முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
  • உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.

இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.

வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.

புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.

Tags:    

Similar News