வழிபாடு

முருகனின் வேல் வடிவம் உணர்த்தும் உண்மை...

Published On 2022-07-08 06:01 GMT   |   Update On 2022-07-08 06:01 GMT
  • வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது.
  • வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

கந்த புராணத்தில் முருகனுக்கும், சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில், வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். ஆனால் அவனது சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட முருகன் தனது வேலை எறிந்து மாமரத்தை இரண்டாகப் பிளக்க, அதில் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் மாறிவிடுகிறது.

முருகன் மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் ஆக்கிக் கொள்கிறார் என்பது இப்புராணங்கள் கூறும் நிகழ்ச்சிகள். இதனால் வீரத்தின் சின்னமான வேல், கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காக்கும் சக்தியுடையது என்ற நம்பிக்கையை இந்துக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. யௌதேயர் காலத்து நாணயத்தில் (கி.மு.200) வேல், சேவலுடன் காணப்படும் கார்த்திகேயன் படம் உள்ளது.

மாமல்லபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்லால் ஆன வேல். இது சங்க காலத்தைச் சேர்ந்தது.சில முருகன் கோவில்களில், தெய்வத்தன்மை கொண்டதாக வேலுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. முருகன் தன் தாய் பார்வதியிடம் இருந்து வேலைப் பெற்ற நிகழ்வாக, ஆண்டுதோறும் முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவின் போது பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள். இச்செயல் அலகு குத்துதல் எனப்படுகிறது. முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

Tags:    

Similar News