திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் 7-ந்தேதி வரை முத்தங்கி சேவை
- முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் காட்சி அளித்தார்.
- கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆனி அமாவாசையான இன்று சாமி தரிசனம் செய்ய திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று இரவே ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலை சுற்றி உள்ள பகுதியில் தங்கி இருந்தனர்.
இன்று அதிகாலை கோவில்குளக்கரை மற்றும் காக்களூர் ஏரிக்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரண்டனர்.
ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி அமாவாசையை முன்னிட்டு கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதேபோல் முத்தங்கி சேவையில் வருகிற 7-ந்தேதி வரை மூலவர் வீரராகவ பெருமாள், கன கவல்லி தாயார் காட்சியளிப்பர்.
இன்று மாலை 6 மணியளவில் உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் கோவில் குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள்கிறார். குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதேபோல் நாளையும் மற்றும் நாளை மறுநாளும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.