நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
- ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவையொட்டி முன்னதாக கடந்த 10-ந் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கந்தூரி விழாவையொட்டி நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளி தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.
ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கொடி ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகையில் இருந்து நாகூர் வரை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கண்கவர் வான வேடிக்கையுடன் நாகூர் தர்கா, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் வருகிற 23-ந்தேதி இரவு நடக்கிறது. மறுநாள் 24-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.