வழிபாடு

நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-03-26 06:33 GMT   |   Update On 2023-03-26 06:33 GMT
  • 4-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
  • 6-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தினசரி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிம்மம், ஹனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில் சாமி திருவீதி உலா வந்து, குளக்கரை மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அடுத்தமாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் இறைவனுக்கு மொய் சமர்ப்பித்து வழிபாடு செய்ய உள்ளனர். இதையொட்டி மாங்கல்ய பொட்டு, பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை மற்றும் மின் அலங்காரம் போன்ற நிகழ்வுகள் நடக்கிறது. 5-ந் தேதி காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஏப்ரல் 6-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் நரசிம்ம சாமி தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News