வழிபாடு

இடர்களை களையும் இடர்குன்றம் நரசிம்மர்

Published On 2023-09-29 04:06 GMT   |   Update On 2023-09-29 04:06 GMT
  • பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம்.
  • குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது.

நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நரசிம்மரிடத்தில் நம்பிக்கையோடு கோரிக்கைகளை சமர்ப்பித்தால் அவர் உடனுக்குடன் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன. சில தலங்கள் மிகவும் விசேஷமானவை. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது. சிறிய தலமாக இருந்தாலும் சக்தி மிக்க தலமாக விளங்கி வருகிறது.

தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஒரு சிற்றூர் இருந்தது. தற்போதைய காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் இணைந்த பகுதியானது முற்காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தான். அவ்வப்போது மரத்தடியில் அமர்ந்து தியானிப்பது அவனுடைய வழக்கமாக இருந்தது.

ஒருசமயம் அந்த இளைஞனுக்கு நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழ, பெரியோர்களிடம் அதற்கான வழியை கேட்டான். அவர்கள் தவமியற்றினால் நரசிம்மரை தரிசிக்கலாம் என்று தெரிவித்தார்கள். ஒருநாள் அந்த இளைஞன் காட்டிற்குள் ஒரு குன்றின் அருகே நடந்து சென்ற போது 'இந்த குன்றே ஹரி. இங்கே நீ தவமியற்றினால் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம்' என்ற அசரீரி வாக்கு எழ, அந்த இளைஞன் அந்த குன்றின் மீது அமர்ந்து நரசிம்ம மூர்த்தியை நினைத்து தவமியற்றினான்.

ஒரு சித்ரா பவுர்ணமி தினத்தன்று நரசிம்ம மூர்த்தி அந்த இளைஞனுக்கு காட்சி கொடுத்தார். அப்போது அந்த இளைஞன் நரசிம்மரிடம் 'தாங்கள் இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும். பக்தர்களின் இடர்களை நீக்கி அருள வேண்டும்' என்ற வேண்டுதலை சமர்ப்பிக்க நரசிம்மரும் அந்த மலைக்குன்றில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். நரசிம்ம மூர்த்தியை தன் தவத்தால் தரிசித்த அந்த இளைஞனே பிற்காலத்தில் இடைக்காடர் என்று அழைக்கப்பட்ட சித்தர் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்.

இப்பகுதி மக்கள் இத்தலத்திற்கு வந்து நரசிம்மரிடம் வேண்ட அவர்களின் இடர்கள் எல்லாம் உடனுக்குடன் நீங்கியதாக ஐதீகம். இக்குன்று 'இடர்குன்று' என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி 'இடர்குன்றம்' என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

எழுபத்தியோரு படிக்கட்டுகளை கடந்து சென்றால் சிறிய கருவறையில் சுயம்பு மூலவராக நரசிம்மர் காட்சி தருகிறார். கருவறையில் சுயம்பு மூலவருக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் சிலாத்திருமேனியாக எழுந்தருளியுள்ளார். பெரியாழ்வார், பேயாழ்வார், உடையவர், தேசிகர் ஆகியோர் சிலா ரூபத்தில் எழுந்தருளியுள்ளனர். சுயம்பு நரசிம்ம மூர்த்திக்கு எதிர்புறத்தில் பெரிய திருவடி கருடாழ்வார் மூலவரை நோக்கி அமைந்துள்ளார். லட்சுமி நரசிம்மர் உற்சவராகவும் அமைந்துள்ளார்.

சுயம்பு நரசிம்மருக்கு அருகில் இடைக்காடர் காட்சி தருகிறார். மலைப்பாதையின் வழியில் சிறிய திருவடி அனுமனுக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.

நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, சித்ரா பவுர்ணமி ஆகிய தினங்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், சுவாதி நட்சத்திர தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தினமும் காலை வேளைகளில் ஒருகால பூஜை நடைபெறுகின்றது. இத்தலத்திற்கு வந்து சுயம்பு நரசிம்மமூர்த்தியை தரிசித்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

தினமும் காலை எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும் இத்தலம் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். சனிக்கிழமைகளில் மட்டும் காலை ஏழு மணி முதல் பதினொன்று முப்பது வரையிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருப்போரூர்-செங்கல்பட்டு வழித்தடத்தில் கொட்டமேடு சந்திப்பில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இடர்குன்றம் அமைந்துள்ளது. மானாமதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் திருப்போரூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், திருக்கழுக்குன்றத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இடர்குன்றம் அமைந்துள்ளது.

Tags:    

Similar News