கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா
- ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும்.
- அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் காலை 7.45 மணிக்கு அம்பாள் கொலு மண்டபத்துக்கு எழுந்தருள், 8 மணிக்கு பஜனை, மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை, இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் போன்றவை நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லுதல் நடக்கிறது. தொடர்ந்து அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளிபல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வருதல், நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு, பின்னர் ஆண்டுக்கு 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.