வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம், சிறப்பு திருப்பலி
- புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலம்.
- சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகப்பட்டினம்:
உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
முன்னதாக 2023-ம் ஆண்டிற்கு நன்றி செலுத்தி வழியனுப்பும் வகையில் இரவு 10.45 முதல் 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நடந்தது.
பின், 2024-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், பேராலய பங்கு தந்தை டேவிட் தனராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. இரவு சரியாக 12 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 2023-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பேராலயம் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்காணோர் திரண்டதால் நகரமே களைகட்டியது.