புத்தாண்டு:திருவண்ணாமலையில் பக்தர்கள் சாமி தரிசனம்
- ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
- பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
உற்சவ மூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்க பட்டிருந்தது. அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கோவிலுக்குள் சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இன்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.