காளஹஸ்தியில் நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிப்பு
- நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்.
- ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள்.
ஸ்ரீ காளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி சிவன்கோவில் சார்பில் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர்களுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணை கோவில்களான நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு, கோவில் நிர்வாகி கே.வி.சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நான்கு மாட வீதிகளில் உள்ள நவசந்தி விநாயகர் கோவிலுக்கு, சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களை வழங்கினார்கள்.
முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முறைப்படி பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை கோவிலில் இருந்து தலைமீது சுமந்து மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று நவசந்தி விநாயகர் கோவில்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு கூறுகையில், விநாயகர் சதுர்த்தி புனித தினத்தை யொட்டி ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் முதன்மை கடவுளாக விளங்கும் கணபதிக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜைப் பொருட்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.