திருவண்ணாமலையில் பழங்கால கோவில்கள் சிதிலமடைந்து வரும் அவலம்
- அழிவின் விளிம்பில் 33 கோவில்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
- பெரும்பாலான கோவில்கள் இடிந்து மண்ணி்ல் புதைந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இங்கு அருள்பாலித்து வரும் அருணாசலேஸ்வரர் நினைத்தாலே முக்தி தரக்கூடியவர். அவரை தரிசனம் செய்ய உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகின்றனர். இது போன்று திருவண்ணாமலை மாவட்டத்தின பல்வேறு கோவில்களும் சிறப்பு பெற்று விளங்குகின்றன.
மாவட்டத்தில் பல்வேறு கோவில்களின் சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்றவை மிக நுட்பத்துடன் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஏராளமான கோவில்கள் உள்ளன.
அக்காலக்கட்டத்தில் கோவில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஏராளமான குறுநில மன்னர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கி ஆன்மிக பணியை மேற்கொண்டனர்.
அழிவின் விளிம்பில் கோவில்கள்
ஆனால் காலப்போக்கில் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி அழிவின் விளிம்புக்கு சென்று கொண்டிருக்கின்றன. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்கள் மண்ணில் புதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் 33 கோவில்கள் உள்ளதாக முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வில் மேலும் 20 கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆவணப்படுத்தும் பணி
அதையும் ஆவணப்படுத்தும் பணியில் வரலாற்று ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோவில்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்த பழங்கால தமிழ் மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. மேலும், அந்தந்த பகுதிகளில் கலைக்கூடங்களின் சிறப்புகளை காட்டுவதாகவும், மக்களின் மனநிலையை ஒருங்கிணைக்கும் தொன்மங்களாகவும் திகழ்வதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செடி, கொடிகள்
கலசபாக்கம் தாலுகா சீனந்தல் கிராமத்தில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெள்ளந்தாங்கீஸ்வரர் கோவில் உள்ளது. விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கற்கோவிலான இந்த கோவிலில் அரியவகை சிற்பங்களும் உள்ளன. இந்த கோவில் முழுவதையும் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளன.
இதே தாலுகாவில் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட விஷ்ணுகோவிலிலும் சிற்பங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதோடு கோபுரம், மண்டபம் அனைத்துமே இடிந்து காணப்படுகிறது.
கீழ்பென்னாத்தூர் தாலுகா பன்னியூரில் சிற்பங்கள், கல்வெட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்பட்ட சிவன் கோவில் அழியும் நிலையில் உள்ளது.
ஆரணி தாலுகா முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள சிவன்கோவில், செய்யாறு தாலுகா இருங்கல் கிராமத்தில் உள்ள சிவன்கோவில், திருப்பனமூர் கிராமத்தில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன்கோவில், செங்கட்டான்குண்டில் உள்ள சிவன் கோவில், தவசி கிராமத்தில் உள்ள சிவன் கோவில், சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள சிவன்கோவில், புதுக்கோட்டை கிராமத்தில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஆகிய கோவில்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
புனரமைக்க நடவடிக்கை
மேலும் வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம்புதூர் கிராமத்தில் 7 கல்வெட்டுகள் கொண்ட சிவன்கோவில், வந்தவாசி தாலுகா எறும்பூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவில், ஆயிலவாடி கிராமத்தில் மண்ணில் புதைந்து வரும் சிவன் கோவில், காரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், இளங்காடு கிராமத்தில் உள்ள சிவன் கோவில், இரும்பேடு கிராமத்தில் உள்ள சிவன் கோவில், கீழ்வில்லிவலம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், கொளவளை கிராமத்தில் உள்ள சிவன் கோவில், மேல்கொடுங்காலூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் சிதலமடைந்து வருகிறது.
இந்த கோவில்களில் சிலவற்றில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவில்களில் சில கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கோவில் முழுவதும் செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளது. பெரும்பாலான கோவில்கள் இடிந்து மண்ணி்ல் புதைந்துள்ளது. சேதமடைந்து வருவதால் பல கோவில்களில் வழிபாடும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்டப்பட்ட கோவில்கள் அழிந்து வருவதாக ஆன்மிக வாதிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அனைத்து கோவில்களையும் மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசு புனரமைப்பதோடு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாளர்களும் இதில் ஆர்வம் காட்டி இதுபோன்ற கோவில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
பாதுகாப்பு
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன்:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான பழங்கால கோவில்கள் சேதம் அடைந்துள்ளது. இந்த கோவில்களில் பல கோவில்கள் எந்தவித அரசு துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கோவில்களை முறையாக அரசு துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அந்த துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் அந்த கோவில் வரும் பட்சத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சேதமடைந்துள்ள கோவில்கள் குறித்த பட்டியலை தயார் செய்ய வேண்டும். அந்தப் பட்டியல் கோவில் கட்டப்பட்ட காலக்கட்டம், சேத விவரம் போன்றவை அடங்கி இருக்க வேண்டும். லேசான சேதங்கள் கொண்ட கோவில்களை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்வதன் மூலம் கிராமத்தின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மறைமுகமாக உயரும். மேலும் கோவில்கள் குறித்த வரலாற்று தகவல்களை வெளி கொண்டு வரும் வகையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்தால் கோவில் பெருமை மக்களை சென்றடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவில் வரலாறு
திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்.பிரகாஷ்:-
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களில் பெரும்பாலும் சிவனுக்காக கட்டப்பட்ட கோவில்கள் அதிகம் உள்ளது. நாளடைவில் பராமரிப்பு இல்லாததால் அவை சேதம் அடைந்து வருகிறது. இக்கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு கோவில்களில் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டை ஆராய்ச்சி செய்து பல கோவில்களுக்கான வரலாற்றை வெளி கொண்டு வர வேண்டும். இந்தக் கோவில்கள் பல்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்டுள்ளது. இதை புதுப்பித்து மீண்டும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்போது திருவண்ணாமலை பகுதியில் ஆட்சி செய்த மன்னர்களின் வரலாறு உலகிற்கு தெரிய வரும்.
கோவில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் அங்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட வேண்டும் அதற்கான வழிவகையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.