கருமத்தம்பட்டியில் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் கொடியேற்றம்
- கிறிஸ்தவர்கள் மரியே வாழ்க, மரியே வாழ்க என்று கோஷமிட்டனர்.
- அக்டோபர் 2-ந்தேதி ஜெபமாலை மாதாவின் பெரிய தேரோட்டம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித ஜெபமாலை மாதா ஆலயம் உள்ளது. 382 ஆண்டு பழமையான இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வது ழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா கோவில் வளாகத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
தேர்த்திருவிழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு ஆலய வளாகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னதாக கொடி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆலய பங்கு குரு ஜான் ஆரோக்கியராஜ் ஸ்டீபன் கொடியேற்றி வைத்தார்.
அப்போது அங்கு கூடி இருந்த கிறிஸ்தவர்கள் மரியே வாழ்க, மரியே வாழ்க என்று கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக காலை 8 மணி அளவில் திருப்பலி நடைபெற்றது. அக்டோபர் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜெபமாலை மாதாவின் பெரிய தேரோட்டம் நடைபெற உள்ளது.