வழிபாடு

பழனி முருகன் கோவில் வெளிப்பிரகாரத்தில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Published On 2023-05-29 06:48 GMT   |   Update On 2023-05-29 06:48 GMT
  • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.
  • திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு முருகப்பெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் முகூர்த்தம், வாரவிடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.

அந்தவகையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே கோவிலின் தரிசன வழிகள், மலைக்கோவிலுக்கு செல்லும் பாதைகள் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பயன்படுத்தி வரும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையங்களிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கூட்டம் அலைமோதியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே நேற்று கேரள மாநில பக்தர்கள் 10 பேர், 12 அடி நீள அலகு குத்தி வந்து கிரிவீதிகளில் வலம் வந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். பழனிக்கு கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. இதேபோல் சாமி தரிசனம் செய்த பிறகு பக்தர்கள், தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்ததால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags:    

Similar News