வழிபாடு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நாளை தொடக்கம்

Published On 2024-04-11 04:23 GMT   |   Update On 2024-04-11 04:23 GMT
  • பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
  • கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

திருவட்டார்:

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதனையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கொடிமரத்தில் ஏற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. தொடர்ந்து மாலை தீபாராதனைக்கு முன்னதாக கோவில் கருவறையில் பூஜையில் வைக்கப்படுகிறது.

பின்னர் நாளை அதிகாலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் விழா நாட்களில் தினமும் சுவாமி வாகனத்தில் பவனி வருதலும், விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

16-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 20-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் இறுதி நாளான 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆராட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்காக கழுவன்திட்டை, தோட்டவாரம் வழியாக சுவாமி ஊர்வலமாகச் சென்று ஆராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சுவாமி மீண்டும் கோவிலுக்கு புறப்படுகிறார். நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

Tags:    

Similar News