ஓர் ஆண்டில் நடராஜ பெருமானுக்கு 6 முறை அபிஷேகம்: காரணம் இதுதான்
- ஓர் ஆண்டில் நடராஜருக்கு 6 நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
- இதில் மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள் ஆகும்.
சிதம்பரம்:
பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். தேவர்களும் இதேபோல 6 கால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்தராயணம் என இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு.
தை முதல் ஆனி வரை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) உத்தராயணம்.
ஆடி முதல் மார்கழி வரை (மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) தட்சிணாயணம்.
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது நமக்கு மார்கழி. காலைப் பொழுது மாசி மாதம். மதியம் சித்திரை திருவோணம். மாலைப் பொழுது ஆனி. இரவு நேரம் ஆவணி. அர்த்தஜாமம் புரட்டாசி. இதன் பொருட்டே நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.
இந்தக் குறிப்பிட்ட ஆறு தினங்களிலும் அபிஷேகங்கள் நடைபெறும்போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிக விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.