பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
- பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். முக்கிய விழாவான தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பறவைக்காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும், கிரி வீதிகளில் நடனமாடியும் வந்தனர்.
தற்போது தைப்பூச திருவிழா முடிந்தபின்னரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் இருந்து குறவர் இன மக்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பாரம்பரிய நடனமாடி பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். இன்றும் விடுமுறை தினம் என்பதால் கிரி வீதி, அடிவாரம், யானைப்பாதை, படிப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகியவற்றில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.