வழிபாடு

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-12-26 06:54 GMT   |   Update On 2023-12-26 06:54 GMT
  • ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
  • பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து

வேங்கிக்கால்:

அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் என்பதால், கடந்த 3 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, அதிகாலை கோவிலில் நடை திறக்கும்போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது.

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் திருவண்ணாமலை நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News