வழிபாடு

காலாண்டு விடுமுறை: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

Published On 2024-10-06 07:23 GMT   |   Update On 2024-10-06 07:23 GMT
  • நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும்.
  • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்செந்தூர்:

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இங்கு சத்ரு சம்ஹார பூஜை, குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.

இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த கோவிலில் சுப முகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது. தற்போது புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா நடப்பதால் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து தரிசனம் செய்வதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.


அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமாளையும் ஒரு சேர தரிசிக்க வாய்ப்பு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதாலும் விடுமுறையை கொண்டாட பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News