வழிபாடு

சித்தூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி, பிரம்மோற்சவ விழா

Published On 2024-04-18 03:23 GMT   |   Update On 2024-04-18 03:23 GMT
  • ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
  • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சித்தூர்:

சித்தூர் கோதண்டராமர் கோவிலில் நேற்று ராமநவமி, பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அதையொட்டி உற்சவர் கோண்டராமர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராமநவமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்தூர் கோதண்டராமர் கோவிலில் 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.

நேற்று காலை கோதண்டராமர் கோவிலில் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், ஆராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் கருடசேவை நடந்தது. உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி சித்தூர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் ராம நவமியை முன்னிட்டு சித்தூர் கிரீம்ஸ்பேட்டையில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் காலை 8.30 மணியளவில் மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்புப்பூஜைகளும், காலை 9.30 மணியளவில் சீதா-ராமர் திருக்கல்யாணம் உற்சவமும், ராமர் பட்டாபிஷேகமும் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி பா.ஜனதா அலுவலகம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பா.ஜனதா மாநில செயலாளர் கோலா.ஆனந்த் தலைமை தாங்கினார். அலுவலக வளாகத்தில் உள்ள ராமர் உருவப்படத்துக்கு ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பா.ஜனதாவினர் சிறப்புப்பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News