ராமநாதபுரம் பெரியபட்டினத்தில் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
- அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது.
- 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவின் 122-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. அதிகாலையில் ஜலால் ஜமால் பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டை ஊர்வலமாக எடுத்து வந்து தர்காவை 3 முறை வலம் வந்த பின்னர் மகான் செய்யதலி ஒலியுல்லா சமாதியில் சந்தனம் பூசப்பட்டது.
அதனைத்தொடர்ந்து உலக நன்மைக்காக பிராத்தனை செய்யப்பட்டது. நேற்று காலை மவுலீது ஓதப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று பகலிலும் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த சந்தனக்கூடு திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
வரும் 17-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, இக்மத், செயலாளர் ஹபீபு, துணை செயலாளர்கள் சாகுல்ஹமீது, சீனிமுஸ்தபா, பசீர், களஞ்சியம், பொருளாளர் சகுபர்சாதிக், சீனிசேகு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீத், ஜாகிர் உசேன், முகமது உசேன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிங்கம் பசீர், அஸ்கர்அலி, அப்துர்ரகீம், பயாஸ்கான், சீனிபீர், பாலு, சொக்கலிங்கம், ரவி, சேகர், பஞ்சமுத்து, பஞ்சவர்ணம், காயாம்பு, கார்த்திகை செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.