நடை பயணமாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- பெருவழிப்பாதை வழியாக நடந்து வந்து 1¼ லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் செல்ல பத்தனம்திட்டை-பம்பை இடையே வாகன வசதி உள்ளது. ஆனால் எருமேலி-பம்பை (27.5 கி.மீ) மற்றும் வண்டிப்பெரியார் புல்மேடு-பாண்டித்தாவளம் (7 கி.மீ) வழியாக நடை பயணமாக மட்டுமே செல்ல முடியும்.
இதில் எருமேலி-பம்பை இடையே கடக்கும் பாதையை பெருவழிப்பாதை என்பார்கள். இந்த பெருவழிப்பாதையில் புனித நடை பயணமாக ஏராளமான பக்தர்கள் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில் இந்த பாதை வழியாக சன்னிதானத்துக்கு சென்று வழிபட்ட பக்தர்கள் விவரம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடப்பு சீசனில் எருமேலி-பம்பை வழியாக புனித நடை பயணமாக கடந்த 31-ந் தேதி வரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 146 பேர் சபரிமலை வந்து தரிசனம் செய்துள்ளனர்.
மேலும் நடை பயணமாக வரும் வழியில் அழுதக்கடவு, மூக்குழி, கல்விடாம் குன்னு, கரிமலை, புதுசேரி, வலியான வட்டம், செரியான வட்டம் ஆகிய இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. யானை, சிறுத்தைகள் உள்பட வன விலங்குகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மகரவிளக்கு பூஜை நெருங்குவதையொட்டி புல்மேடு- பாண்டித்தாவளம் வழியாகவும் தரிசனத்திற்கு நடை பயணமாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தினமும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருவதால் மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
அதே சமயத்தில் சன்னிதானத்தை சுற்றி வலம் வரும் பக்தர்கள் மீண்டும் தரிசனத்திற்கு முயல்வதாலும் சன்னிதானத்தில் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
மண்டல பூஜை சமயத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜை காலத்திலும் கூடுதல் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.