வழிபாடு

கும்பகோணம் சாரங்கபாணி கேவில் தேரை படத்தில் காணலாம்.

சாரங்கபாணி கோவில் தேர் சிறப்புகள் குறித்த பதாகையை வைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published On 2023-05-10 07:21 GMT   |   Update On 2023-05-10 07:21 GMT
  • சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் கடந்த 4-ந் தேதி நடந்தது.
  • இந்த தேரை ஏராளமான பக்தா்கள் தினமும் கண்டு ரசித்து வருகின்றனர்.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ கோவில்களில் ஒன்றாகவும் பல்வேறு சிறப்புகள் உடைய கோவிலாக உள்ள சாரங்கபாணி சாமி கோவிலில் நடைபெறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பு பெற்றது. இதற்காக இந்த கோவிலின் பெரிய தேர் சித்திரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களில் இது 3-வது பெரிய தேராகும். இந்த தேர் திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும்.

இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் ஆகும். இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும். சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம் கடந்த 4-ந் தேதி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டம் முடிந்த நிலையில் தேர் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேரை ஏராளமான பக்தா்கள் தினமும் கண்டு ரசித்து வருகின்றனர். தேரை காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தேரின் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் சாரங்கபாணி கோவில் சித்திரை தேர் குறித்த சிறப்புகள் அடங்கிய பதாகையை தேரின் அருகில் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சித்திரை தேர் குறித்த சிறப்புகளை பல்வேறு சுற்றுலா பயணிகளும் கலை தொல்பொருள் ஆய்வாளர்களும் அறிந்து கொள்ள முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Similar News