திருப்பதியில் அதிகார நந்தி வாகனத்தில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் உலா
- கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
- இன்று காலை வியாக்ராபாத வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா.
திருமலை:
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அதிகார நந்தி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேற்கண்ட வாகன வீதிஉலா முன்னால் நாட்டிய, நடன, இசை நிகழ்ச்சிகள் நடந்தன.
பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (புதன் கிழமை) காலை வியாக்ராபாத வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.