வழிபாடு

கிருஷ்ணரை பற்றி அறிந்திராத சில கதைகள்!

Published On 2024-08-25 02:47 GMT   |   Update On 2024-08-25 02:47 GMT
  • ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார் கிருஷ்ணர்.
  • துவாரகைக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

கம்சனின் சகோதரி தேவகி. இவளை வசுதேவருக்கு கம்சன் திருமணம் செய்து கொடுத்தான்.

ஒருநாள் வசுதேவர், தேவகி இருவரையும் கம்சன் தனது தேரில் ஏற்றி அழைத்து சென்று கொண்டிருந்தான். அப்போது வானில் அசரிரீ ஒன்று கேட்டது. "கம்சா.... உன் சகோதரி தேவகிக்கு பிறக்கும் 8-வது குழந்தை உன்னை கொல்லும்" என்று அசரிரீ ஒலித்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கம்சன் தேவகியை கொலை செய்யும் எண்ணத்துடன் வாளை உருவினான். அவனை தடுத்த வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் ஒப்படைத்து விடுகிறோம் என்று உறுதி அளித்தார்.

அதை கம்சன் ஏற்றுக் கொண்டான். தேவகி தன் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்தான். அங்கு தேவகிக்கு 7 குழந்தைகள் பிறந்தன.

அந்த 7 குழந்தைகளையும் பிறந்த உடனேயே கம்சன் அழித்தான். இந்தநிலையில் தேவகி 8-வது முறையாக கர்ப்பம் அடைந்தாள்.

அதே சமயத்தில் வசுதேவரின் நண்பர் நந்தாவின் மனைவி யசோதாவும் கர்ப்பம் அடைந்தாள். ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர தினத்தன்று தேவகிக்கு ஆண் குழந்தையும் யசோ–தாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தன.

அப்போது மதுரா சிறையில் இருந்த வசுதேவர் முன்பு மகாவிஷ்ணு தோன்றினார். "இந்த ஆண் குழந்தை (கிருஷ்ணர்)யை கோகுலத்தில் உள்ள யசோதா வீட்டில் சேர்த்து விட்டு, அங்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

அதன்படி வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் சுமந்து கொண்டு சென்றார். அவருக்கு ஆதிசேஷன் குடை பிடித்துச் சென்றது. யமுனை நதியைக் கடந்து சென்று அந்த குழந்தையை பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார்.

அந்த குழந்தைக்கு கிருஷ்ணன் என்று நந்தர் பெயரிட்டார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணை திருடி குறும்புத்தனம் செய்து காலத்தை கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார்.

இதற்கிடையே கம்சன் தன் சகோதரி தேவகிக்கு 8-வது குழந்தை பிறந்து இருப்பதை அறிந்து சிறைக்கு வந்தான். அங்கு அவனுக்கு தெரியாமல் மாற்றி வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை பார்த்தான்.

இந்த பெண் குழந்தையா என்னை கொல்லப்போகிறது என்று எக்காளமிட்டு சிரித்தான். பிறகு அந்த பெண் குழந்தையை தூக்கிப் பிடித்தப்படி வாளால் வெட்டி கொல்ல முயன்றான்.

அப்போது அந்த குழந்தை, "உன்னை கொல்ல அவதாரம் எடுத்து இருப்பவர் கோகுலத்தில் வளர்ந்து வருகிறார். விரைவில் உன் கதை முடியப் போகிறது" என்று கூறி விட்டு மறைந்தது. அந்த பெண் குழந்தைதான் பின்னாளில் பவானி அம்மனாக அவதாரம் எடுத்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.

மாயமாய் மறைந்த பெண் குழந்தை சொன்னதைக் கேட்டு கம்சன் மேலும் அதிர்ச்சி அடைந்தான். தனது பணியாட்களை அனுப்பி விசாரித்தான். அப்போது கோகுலத்தில் வளரும் கிருஷ்ணர் தான் தேவகி பெற்ற 8-வது குழந்தை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து கம்சன் தனது வீரர்களை அனுப்பி கிருஷ்ணரை கொல்ல முயன்றான். அந்த அசுரர்கள் அனைவரையும் கிருஷ்ணர் வதம் செய்தார்.

இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் கிருஷ்ணர் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.


பிறகு மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருசேத்திரப் போரில் தனது சேனையை கவுரவர்களிடம் கொடுத்து விட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.

இந்த போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது. பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார்.

Tags:    

Similar News